கமுதி அருகே பொன் ஏர் உழும் திருவிழா

கமுதி, ஏப்.16: கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டியில் பொன் ஏர் உழும் திருவிழா நடைபெற்றது. கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டியில், இந்த வருடம் விவசாய செலவினங்கள் குறைந்து, அதிக மகசூல் கிடைக்கவும் இயற்கை சீற்றங்களில் விவசாயத்தை பாதுகாக்க வேண்டியும், பொன் ஏர் உழும் திருவிழா சித்திரை முதல் நாளன்று மாலை நேரத்தில் நடைபெற்றது. பராம்பரியமாக வருடா வருடம், இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இக்கிராமத்தில் உள்ள அனைவரும் விவசாயிகளாக இருந்து வரும் நிலையில், அலங்கரிக்கப்பட்ட ஒரு ஜோடிமாடுகளும், பலூன் மற்றும் கலர் பேப்பர்களால் அலங்கரிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் கொண்டு பொன்ஏர் விடும் விழா நடத்தினர்.

இதில் கிராம மக்கள் அனைவரும் நெல் விளையும் வயல்கள் மற்றும் நவதானியங்கள் பயிரிடும் வயல்களில் மாடுகள் மற்றும் டிராக்டர்கள் கொண்டு உழுதனர்.வீடுதோறும் ஓலை பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட விதைநெல் மற்றும் விதை நவதானியங்களை பாரபட்சம் பாராமல் அனைவரின் வயல் களிலும் விதை நெல்களை தூவி வயலை வழிபட்டனர். சித்திரை முதல் நாளில் பொன் ஏர் விட்டால் அந்த வருடம் விவசாயம் சிறப்பாக இருக்கும் என்பது இவர்களின் பாரம்பரிய நம்பிக்கையாகும்.இந்நிகழ்ச்சியில் கிராமத்தில் உள்ள பெண்கள் உள்ளிட்ட 1000 பேர் கலந்து கொண்டு நெல்மணிகளை தூவி விவசாயம் சிறப்பாக நடைபெற சாமி கும்பிட்டனர்.

The post கமுதி அருகே பொன் ஏர் உழும் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: