கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கூட்டு குடிநீர் திட்டப்பணிகள்: கலெக்டர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு

கரூர், ஏப். 13: கரூர் மாவட்டம் க.பரமத்தி, கருர் ஊராட்சி ஒன்றியங்களுக்காக மறவாபாளைய், குப்பம் ஊராட்சி தாளையூத்துப்பட்டி மற்றும் செவந்திபாளையம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்று வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: கருர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் க.பரத்தி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 756 ஊரக குடியிருப்புகளுக்கு தற்போது பயனில் உள்ள 101 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் 378 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம், புளோரைடு குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் வெள்ளக்கோயில், காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய 4 கூட்டு குடிநீர் திட்டங்களை மறு கூட்டமைப்பு செய்து குடிநீர் வழங்கவும், காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு புதிய கூட்டு குடிநீர் திட்டம் அமைத்து குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் வடிவமைக்கப்பட்ட குடிநீர் அளவிலான 16.29 மில்லியன் லிட்டரில் 4.53 மில்லியன் லிட்டர் குடிநீர், மறவாபாளையத்தில் தற்போது பயனில் உள்ள 4 கூட்டு குடிநீர் திட்டங்களின் 4 நீர் உறிஞ்சு கிணறுகள் மூலம் எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், இந்த திட்டத்திற்கு தேவைப்படும் மீதமுள்ள 11.76 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு செவந்திபாளையம், சேமங்கி ஆகிய இரண்டு இடங்களில் புதிதாக நீர் சேகரிப்பு கிணறு அமைத்து 31.86 கிமீ நீளமுள்ள 400 மிமீ விட்டமுள்ள நெகிழ் இரும்புக் குழாய்கள் மூலம் நீர் உந்தப்பட்டு தாளயூத்தப்பட்டியில் அமைக்கப்படவுள்ள 7.95 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்சேகரிப்பு தொட்டி உடன் கூடிய நீர் உந்து நிலையத்தில் சேகரிப்படவுள்ளது.

சேகரிப்பட்ட குடிநீர், 375.98 கிமீ நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் மற்றும் 16 நீர் உந்து நிலையங்கள் வாயிலாக ஏற்கனவே பயனில் உள்ள 35 ஊராட்சி மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள 45 தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் சேகரிப்படவுள்ளது. பின்னர் ஊராட்சி தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளில் இருந்து 658.65 கிமீ பிரிவு நீர் உந்து குழாய்கள் மூலம் ஏற்கனவே, பயனில் உள்ள 896 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள 149 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு, 1435.89 கிமீ நீளமுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் 40502 வீட்டினைப்புகளுக்கு குடிநீர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு, ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 440.63 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 4 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, ஒவ்வொன்றிக்கும் பணி ஆணை வழங்கப்பட்டது.

திட்ட செயலாக்க பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் திட்ட பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 58 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளப்பட்டி நகராட்சி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சிகளுக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம், 1998ம் ஆண்டு ரூ. 17.21 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்ட பணிகள் முடிவுற்கு 2002ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு கரூர் மாவட்டத்தில் உள்ள மறவாபாளையம் கிராமத்தில் நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட்டு, க.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் மூலம் அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு நாளொன்றுக்கு 11 லட்சம் லிட்டர் மற்றும் பள்ளப்பட்டி நகராட்சிக்கு நாளொன்றுக்கு 25லட்சம் லிட்ட குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் வீராசாமி, உதவி செயற்பொறியாளர் விநாயகம், உதவி பொறியாளர்கள் யோகராஜ், சிவராஜ், சவுந்தர்யா, பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனைவர்ஜான், தாசில்தார்கள் குமரேசன், முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கூட்டு குடிநீர் திட்டப்பணிகள்: கலெக்டர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: