வாஷிங்டன்: சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத்துடன் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அமெரிக்காவில் நடக்கும் சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எப்) மற்றும் உலக வங்கியின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், ஜி.20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கவும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்று உள்ளார். இந்நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத்தை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார்.
இந்த சந்திப்புக்கு பின் ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,ஜி -20 மாநாட்டின் தலைமை பதவியை பெறுவதற்காக சில கொள்கை வழிகாட்டி உதவிகளை அளித்ததற்காக ஐஎம்எப்க்கு இந்தியா நன்றி தெரிவிக்கிறது என குறிப்பிட்டுள்ளது. கீதா கோபிநாத் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், நிர்மலா சீதாராமனுடனான பேச்சுவார்த்தை மிகுந்த பலன் அளித்தது. அவருடன் கடன் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதோடு, கிரிப்டோ சொத்துக்களை ஒழுங்குபடுத்துவது குறித்து பேசினேன் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடன் சீரமைப்பு திட்டம்
வாஷிங்டன்னில் இன்று நடக்கும் சர்வதேச நாணய நிதிய கூட்டத்தில் இலங்கையின் கடன் சீரமைப்பு திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜப்பான் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி,பிரான்ஸ் நாட்டின் கருவூலத்துறை இயக்குனர் ஜெனரல் இம்மானுவேல் மவ்லின் ஆகியோர் கூட்டாக அறிவிக்கவுள்ளனர்.The post ஐஎம்எப் உயர் அதிகாரியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு appeared first on Dinakaran.
