கணவரால் ஆசிட் வீசப்பட்ட பெண்ணிற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை, ஏப். 12: கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கவிதா மீது கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் இரண்டு திருட்டு வழக்குகள் உள்ளது. இந்நிலையில், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கவிதா, குழந்தைகள் மற்றும் கணவனை விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். கவிதாவை, சிவக்குமார் தேடி வந்தார். இதனிடையே, கவிதா, கடந்த 2016-ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக கவிதா, கடந்த மார்ச் 23ம் தேதி நீதிமன்றம் வந்தார். அப்போது, அவரது கணவர் சிவக்குமாரும் பின்தொடர்ந்து வந்தார். கவிதாவிடம், சிவக்குமார், குடும்ப பிரச்னை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கவிதா முதலாவது தளத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்றார். பின்தொடர்ந்து சென்ற சிவக்குமார், தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கவிதா மீது ஊற்றினார்.

இதில், அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவர், வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டார். அங்கிருந்த வழக்கறிஞர்கள் சிலர், அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிகிச்சையின் ஒரு பகுதியாக அவரது உடலில் ஒரு சில பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் உடல் நலம் தேறி வருகிறார்.

மனைவி மீது ஆசிட் வீசிய சிவாவை கோர்ட் வளாகத்தில் இருந்த சில வழக்கறிஞர்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கோவை பந்தைய சாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீடு திட்டத்தின்படி இடைக்கால இழப்பீடு நிவாரணமாக பாதிக்கப்பட்ட கவிதாவிற்கு ரூ.3 லட்சம் வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post கணவரால் ஆசிட் வீசப்பட்ட பெண்ணிற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: