கலை திருவிழா போட்டிகளில் வெற்றி: வெளிநாடு செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்

சிவகங்கை, ஏப்.11: சிவகங்கை மாவட்டத்திலிருந்து வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல 4 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகள் மற்றும் கலைத்திருவிழாப் போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் வெற்றி பெற்று தேர்வாகியுள்ளனர். வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற கல்லல் அருகே வெற்றியூர் அரசு மேல்நிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவர் கு.குகன், இலக்கிய மன்றப் போட்டியில் வெற்றி பெற்ற இளையான்குடி அருகே சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி மே.துர்காதேவி, காரைக்குடி இரா.சே.நகராட்சி உயர்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி இரா.சண்முகஷிவானி, கலைத்திருவிழாவில் தனி நபர் நகைச்சுவை போட்டியில் வெற்றி பெற்ற எஸ்.புதூர் அருகே கொண்டப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர் வெ.சின்னையா ஆகிய நான்கு பேர் வெளிநாடு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு மாணவ,மாணவிகளையும் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமிநாதன் பாராட்டி தெரிவித்ததாவது:தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசுப் பள்ளி மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்த நல்ல ஒரு களமாக கலைத்திருவிழா அமைந்தது. கிராமப்புற பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்தி வெளிக்கொணர இது நல்ல வாய்ப்பு. அனைத்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், பெற்றோர் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். மாணவர் சின்னையா தெரிவித்ததாவது:எங்கள் வீட்டில் கலைஞர் ஆட்சியில் அரசு வழங்கிய டிவி தான் உள்ளது. அதில் வரும் நிகழ்ச்சிகளை பார்த்து தான் தனி நபர் நகைச்சுவையில் என்னை தயார் படுத்தினேன். வெளிநாடு செல்வேன் என நான் நினைத்து பார்த்தது கிடையாது. தமிழக அரசுக்கு நன்றி. இவ்வாறு தெரிவித்தார்.

The post கலை திருவிழா போட்டிகளில் வெற்றி: வெளிநாடு செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: