கே.எஸ்.அழகிரி தலைமையில் கருப்பு சட்டையில் திரண்ட காங்கிரசார் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: வள்ளுவர் கோட்டம் அருகே 500க்கும் மேற்பட்டோர் கைது

*கருப்பு பலூன் காங்., நிர்வாகிக்கு வீட்டு காவல்

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார். அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு முதல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வைத்திருந்த லட்சக்கணக்கான கருப்பு பலூன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், டில்லி பாபு, ரஞ்சன் குமார், அடையாறு துரை, மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் வீடுகளில் நேற்று முன்தினம் இரவு முதல் அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்த பாஜ அரசை கண்டிக்கிற வகையில் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்த காங்கிரசார் கருப்பு சட்டை அணிந்தும், கையில் கருப்பு கொடி ஏந்தியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், மேலிட பொறுப்பாளர் வல்ல பிரசாத், துணை தலைவர் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி எம்பி, மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், சிரஞ்சீவி, ஆலங்குளம் எம்.எஸ்.காமராஜ், எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், டில்லி பாபு, ரஞ்சன் குமார், அடையார் துரை, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுமதி அன்பரசு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

The post கே.எஸ்.அழகிரி தலைமையில் கருப்பு சட்டையில் திரண்ட காங்கிரசார் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: வள்ளுவர் கோட்டம் அருகே 500க்கும் மேற்பட்டோர் கைது appeared first on Dinakaran.

Related Stories: