பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகை: 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு; விடியவிடிய வாகன சோதனை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனைய கட்டிடம் மற்றும்சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். பிரதமர் வருகையை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் கமிஷனர்கள் அன்பு, பிரேம் அனந்த் சின்கா, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களிடம் ஆலோசனை நடத்தினர். நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள 22,000 போலீசார் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விழா நடைபெறும் பகுதிகளில் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர். மேலும், நிகழ்ச்சி நடக்கும் உள்பகுதிகள் அனைத்தும் பிரதமர் அலுவலக பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். வெளிப்பகுதி, சாலை மார்கம் உள்ளிட்ட பகுதியில் மாநகர காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இன்று சென்னை முழுவதும் குறிப்பாக விழா நடைபெறும் பகுதியில் டிரோன்கள் பறக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

பிரதமர் சாலை மார்கமாக செல்லும் அடையார் ஐஎன்எஸ் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம், பிறகு விவேகானந்தர் இல்லம், பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானம் வரையுள்ள பகுதிகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க நிகழ்ச்சி நடக்கும் 4 பகுதியில் தனித்தனியாக 4 துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் கான்வாய் போது யாரேனும் தடையை மீறி உள்ளே நுழைந்தால் அவர்களை கைது செய்ய சிறப்பு அதிவிரைவுப்படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், அடையார் ஐஎன்எஸ் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலும், பிறகு ரயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து 5 அடிக்கு ஒரு காவலர் வீதம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நேற்று மாலை பிரதமர் சாலை மார்கமாக செல்லும் பாதைகள் அனைத்தும் பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையில் வாகன பாதுகாப்பு ஒத்திகை வெற்றிகரமாக நடத்தினர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் போது, 22 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதற்காக மெரினா, சென்ட்ரல், பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி இன்று பகல் 1.35 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார். பிறகு விமானத்தில் இருந்து இறங்கியதும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். பிறகு மோடி சிறப்பு வாகனம் மூலம் 2.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள கட்டிட வளாகத்திற்கு வருகிறார்.

பிறகு 3 மணிக்கு புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். அதைதொடர்ந்து 3.20 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு 3.55 மணிக்கு வருகிறார். பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக பாதுகாப்பு வாகனங்கள் அணி வகுப்புடன் 4 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்கிறார். பிறகு 4.20 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

பின்னர் சாலை மார்கமாக மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் மாலை 4.45 மணிக்கு கலந்து கொள்கிறார். அங்கு நிகழ்ச்சி முடிந்து 5.45 மணிக்கு சாலை மார்கமாக அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு செல்கிறார். பிறகு 6 மணிக்கு ஹெலிக்காப்டர் மூலம் 6.20 மணிக்கு விமான நிலையம் அடைகிறார். அங்கிருந்து சாலை மார்கமாக பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு செல்கிறார். நிகழ்ச்சி முடிந்த இரவு 7.35 மணிக்கு மீண்டும் சாலை மார்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து கர்நாடகாவில் உள்ள மைசூர் விமான நிலையத்திற்கு தனது தனி விமானம் மூலம் செல்கிறார்.

  • அதிநவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம்

    பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கும் சென்னை விமானநிலைய புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் ரூ.2400 கோடியில் கட்டப்பட்டது. 5 தளங்களுடன் புதிய முனையம் வடிமைக்கப்பட்டு உள்ளது. கீழ்தளத்தில் பயணியர் உடைமைகள் கையாளப்படுகின்றன. தரைதளத்தில் சர்வதேச பயணிகள் வருகைக்கான நடைமுறைகள் கையாளப்படும். 2வது தளத்தில் பயணிகள் புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். மற்ற தளங்களில் விமான நிறுவன அலுவலகங்கள், பயணிகள் ஓய்வறை மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிய முனையத்தின் வருகை, புறப்பாடு பகுதியில் குடியுரிமை கவுன்டர்களின் எண்ணிக்கை 108 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

The post பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகை: 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு; விடியவிடிய வாகன சோதனை appeared first on Dinakaran.

Related Stories: