அவிநாசி,ஏப்.7: அவிநாசி பேரூராட்சி மன்றக்கூட்டம் நேற்று பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.செயல்அலுவலர் செந்தில்குமார், துணைத்தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கவுன்சிலர்கள் கவிதா, சரவணக்குமார், சசிகலா, கருணாம்பாள், பத்மாவதி, தேவி, முருகநாதன், சாந்தி, கார்த்திகேயன், சித்ரா, பருக்கத்துல்லா, கோபாலகிருஷ்ணன், ரமணி, தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.அவிநாசி பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: ஸ்ரீதேவி:கைகாட்டிபுதூர் குப்பை கிடங்கில் துர்நாற்றம் வீசுகிறது. அவிநாசிலிங்கம்பாளையம் செல்லும் வீதிகளில் பழுதடைந்த கழிவுநீர்வாய்க்கால் உள்ளது. இதனால் கழுவுநீர் தேங்கியுள்ளது. கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும்.
கோபாலகிருஷ்ணன்: சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது. கடந்த 3 மாதங்களில் 19 விபத்து ஏற்பட்டு கைகால் முறிவு ஏற்பட்டது. 4 பேர் இறந்துள்ளனர்.எனவே, ரோட்டோர கடைகள் சுங்க ஏலம் விடுவதற்கு முன்பு போக்குவரத்து காவல் துறை, அரசு அதிகாரிகளை அழைத்து முறையாக ஆலோசனை நடத்தி, சுங்க ஏலத்தை நிர்ணயித்து, முறைப்படுத்தி, ஏலம் விட வேண்டும். திருமுருகநாதன்:வ.உ.சி.பூங்காவில் சமூக விரோத செயல்கள் அதிகரிக்கிறது. சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்க வேண்டும். பூங்கா தண்ணீர் தொட்டிகளை தூய்மைபடுத்த வேண்டும். கடந்த ஒரு வருடமாக நாயக்கன் தோட்டத்து, பகுதியில் குடியிருப்புகள் அதிகமானதால் குடிநீர் குறைவாக வழங்கப்பட்டது.
குழாயை இரண்டாக பிரித்து வழங்கி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. குடிநீர் வரத்தை சரி செய்து அதிகரித்து வழங்கிய பேரூராட்சி தலைவர் மற்றும் நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதே போல, காமராஜ் வீதியிலும் குடிநீரை சரி செய்து வழங்க வேண்டும். பருகத்துல்லா:பழைய பஸ் நிலையத்தின் பின்புறத்தில் பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும் பேரூராட்சித்தலைவர் தனலட்சுமி: படிப்படியாக 18 வார்டுகளிலும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். மன்றக்கூட்டத்தில் 34 மன்ற பொருள்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பேரூராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்று ஒரு வருட காலம் நிறைவடைகிறது.
பேரூராட்சியில் இதுவரை ரூ.14 கோடியே 69 லட்சத்துக்கு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளது. தமிழக முதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சொத்துவரி. குடிநீர் வரி உள்ளிட்ட வரியினங்கள். 90 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மண்டலத்தில் அவிநாசி பேரூராட்சியில் மட்டும்தான் அதிக அளவில் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
The post அவிநாசி பேரூராட்சியில் ரூ.14.69 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் appeared first on Dinakaran.