ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு பணி தொடங்கவில்லை: அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்று ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 1950 மற்றும் தேர்தல் விதிகள் திருத்தச் சட்டம் 2021ன்படி, ஓட்டு போட செல்லும் வாக்காளர், தேவைப்படும் பட்சத்தில் தேர்தல் அதிகாரியிடம் தங்களது அடையாள அட்டையை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விவரங்களை வாக்காளர் தாமாக முன் வந்து இணைக்கும் பணி கடந்தாண்டு ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவையில் ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘’ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்காத வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணிகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான இலக்குகள் அல்லது காலக்கெடு எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்பதற்கான பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை,’’ என்று தெரிவித்தார்.

The post ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு பணி தொடங்கவில்லை: அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: