இருந்திராப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பு காளைகள் முட்டி 27 பேர் காயம்

விராலிமலை, ஏப்.6: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே இருந்திராப்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 655 காளைகள் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டி 27 பேர் காயமடைந்தனர். இலுப்பூர் அருகேயுள்ள இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இவ்வாண்டு ஜல்லிக்கட்டு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 2.50 மணிவரை நடைபெற்றது. இப்போட்டியில் 655 காளைகள் களம் கண்டது. இப்போட்டியில் 159 மாடுபிடி வீரர்கள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்கினர். இப்போட்டியில் 27 பேர் காயமடைந்தனர் இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போட்டியை கோட்டாட்சியர் குழந்தைசாமி, தாசில்தார் ரமேஷ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

முதலில் கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடை பராமரிப்புதுறை உதவி இயக்குநர் பாபு தலைமையில் கால்நடை மருத்துவகுழுவினர் 30 பேர் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டது. போட்டியில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பணம் முடிப்பு, சைக்கிள், கட்டில், அயர்ன் பாக்ஸ், சில்வர் அண்டா, வெள்ளி காசு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வந்திருந்து திடலின் இருபுறமும் திரண்டு நின்று கண்டு போட்டியை கண்டு ரசித்தனர்.

மருத்துவ துறை சார்பில் ஜல்லிக்கட்டு திடல் அருகே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 2 மருத்துவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் காயம் அடைந்தவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளித்தனர். இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. போட்டியை தாசில்தார் ரமேஷ் உள்ளிட்ட வாருவாய்துறை அலுவலர்கள் கண்காணித்தனர். பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி காயத்திரி(இலுப்பூர்), செங்குட்டுவேலன்(கீரனூர்) ஆகியோர் தலைமையில் போலீஸார், ஊர்காவல்படையினர் 62 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

The post இருந்திராப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பு காளைகள் முட்டி 27 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: