பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி கோயில்களில் திருவிழா கொடியேற்றம்

விகே புரம், ஏப். 6. பாபநாசம் உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதே போல் அம்பை காசிநாதர் கோயில், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் அகத்தியர் கோயில்களில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் உள்ள பிரசித்திபெற்ற உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். இதன்படி இந்தாண்டுக்கான சித்திரை விசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி சிவசுப்பிரமணிய பட்டர் தலைமையில் ‌சிவாச்சாரியார்கள் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடத்தினர். திருவிழா நாட்களில் தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் உள் வீதியுலா நடைபெறும். விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் விகேபுரத்தில் வரும் 13ம் தேதி காலை 10மணிக்கு நடக்கிறது. மறுநாள் (14ம் தேதி) இரவு 8 மணிக்கு பாபநாசத்தில் தெப்பத் திருவிழாவும், இரவு 12 மணிக்கு அகஸ்தியருக்கு சுவாமி அம்பாள் திருமண கோலத்தில் காட்சி கொடுக்கும் வைபவமும் நடைபெறும்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், கிருஷ்ண காந்தன் குடும்பத்தார், 8ம் மண்டகப்படி தலைவர் அருண், 9ம் மண்டகப்படி தலைவர் திரவியக்கனி, கவுன்சிலர்கள் ராமலட்சுமி, விக்னேஷ், கௌகர் கான், அருள்மணி, முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், முத்துராமலிங்கம் தளவாய், மகேந்திரன், அதியமான், செல்லத்துரை, வைகுண்ட ராமன், மாரியப்பன், அனைத்து சமுதாய மண்டபடி தலைவர்கள், கோயில் மணியம் செந்தில் கிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் என திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் கவிதா பிரியதர்ஷினி, தக்கார் கவிதா, ஆய்வாளர் கோமதி, நிர்வாக அதிகாரி போத்திச்செல்வி செய்திருந்தனர்.

அம்பை: அம்பை காசிநாதர் கோயில், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் அகத்தியர் கோயில்களில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் மரகதாம்பிகை உடனுறை காசிநாத சுவாமி கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் வீதியுலாவாக எடுத்துவரப்பட்ட கொடி பட்டம் வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசை ஒலிக்க கொடியேற்றப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். இதே போல் அம்பை அகஸ்தியர் கோயிலிலும், கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோயிலிலும் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு அங்குரார்ப்பணம் நடந்தது.

திருவிழா நாட்களில் அம்பை, கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோயில்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. திருவிழா நடைபெறும் ஏப். 11,12 ஆகிய தேதிகளில் தாமிரபரணி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித தீர்த்தக்குடம் எடுத்து ஆண்கள் அங்க பிரதட்சணமும், பெண்கள் கும்பிடு நமஸ்காரமும், சிறப்பு பூஜையும், அன்னம் சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெறும். அம்பை காசிநாதர் கோயிலில் நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் ராம்குமார், ஆய்வாளர் கோமதி, தக்கார் முருகன், அரசு கூடுதல் வக்கீல் காந்திமதி நாதன், வாசுதேவ ராஜா, பண்ணை சந்திரசேகரன் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதே போல் கல்லிடைக்குறிச்சி அகத்தியர் கோயிலில் நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் சங்கர நாராயணன், முருகாண்டி, பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள், கட்டளைதாரர்கள், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

The post பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி கோயில்களில் திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: