சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக இயக்குநர், சைபர் கிரைம் பிரிவில் ஆன்லைன் மூலம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவரின் மகன் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் கடந்த 30 வருடங்களாக சங்கிலியால் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார். இது எவ்வளவு பெரிய அவமானம். காப்பகத்தில் அவரை முறையாக பராமரிப்பதில்லை. அவர் சொன்ன விவரங்களை வைத்து தான் இந்த படத்தை எடுத்தேன். மேலும் அங்கு 3 ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள். அதில் 500 பேருக்கு மேல் முற்றிலும் குணமானவர்கள். ஆனால் அவர்களை அழைத்துச் செல்ல யாரும் இல்லாததால் அங்கேயே இருந்து மேலும் மனச்சிதைவுக்கு உள்ளாகிறார்கள். இந்த படப்பிடிப்பு நடத்த என்னிடம் ரூ.1 லட்சம் வரை மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. அந்த பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் என்று கேட்டபோது அதற்கு அனுமதிக்கவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட சாதாரண மனிதர்கள் தானே, இரவு 6 மணிக்கே இரும்பு கம்புகளின் பின்னால் அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்பு கம்பிகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. காற்று கூட அந்த கதவு வழியாக நுழைய முடியாமல் மூடி இருக்கும். நான் பார்த்த நோயாளிகள் தங்களை அவிழ்த்து விடுமாறு கதறுகிறார்கள், என உண்மைக்கு புறம்பான, எவ்வித ஆதாரமும் இல்லாத தகவல்கள் பதிவிட்டு, பகிரப்பட்டு வரப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த தவறான தகவல், தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. இவ்வாறு பொய்யான தகவலை பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தது. …
The post சமூக வலைதளங்களில் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் மீது அவதூறு: போலீசில் புகார் appeared first on Dinakaran.