கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட கர்ப்பிணி சாவு கோட்டாட்சியர், போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி, மார்ச் 27: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் கவியரசி (21). இவருக்கும், சின்னசேலம் அருகில் உள்ள தகரை கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மூர்த்தி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கவியரசி இரண்டாவதாக கர்ப்பமடைந்தார். இதையடுத்து கவியரசி கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும். இல்லையென்றால் தாய்க்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறி மருத்துவர்கள் கவியரசிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. அப்போது கவியரசிக்கு திடீரென ரத்தபோக்கு அதிகரித்ததால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு கவியரசிக்கு தொடர்ந்து 20 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ரத்தபோக்கு குறையாததால் கவியரசிக்கு கர்ப்பப்பையை நீக்கியதாகவும், பின்னர் தொடர்ந்து தீவிர சிகிச்சையும் அளித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை கவியரசி பரிதாபமாக உயிரிழந்தார். பிறந்த பெண் குழந்தையின் எடையும் குறைவாக உள்ளதால் அக்குழந்தை அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கவியரசிக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தான் அவர் இறந்துவிட்டதாக கூறி கவியரசியின் தந்தை சக்திவேல் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ராவும் மேல் விசாரணை செய்து வருகிறார்.

Related Stories: