பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

தொண்டாமுத்தூர்,மார்ச்27: கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, பேரூர் கோவில் தேர்த்திருவிழா இன்று (27ம் தேதி) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, மாலை யாகசாலை பூஜையும், மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர்28ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 7 நாட்களுக்கு, காலைதோறும் யாக சாலை பூஜைகளும், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும், நடக்கிறது.

இதையடுத்து, வரும் 1ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு, மறுநாள் 2ம் தேதி மாலை பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து, மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து, வரும் 4ம் தேதி இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. இறுதியாக, வரும் 5ம் தேதி, அதிகாலை நடராஜருக்கு மகா அபிஷேகமும், காலை 7 மணிக்கு மேல், பங்குனி உத்திர தரிசன காட்சியும், திருவீதி உலாவும் நடக்கிறது. இறுதியாக, இரவு 8 மணிக்கு கொடியிறக்குதலுடன் விழா முடிகிறது. தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: