ராகுல்காந்தியை நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் பாஜக சதி திட்டம் செய்துள்ளது

வடலூர், மார்ச் 26: குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வெற்றி கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட கொத்தவச்சேரி, ஆடூர், குறிஞ்சிப்பாடி, வடலூர், அம்பலவாணன்பேட்டை உட்பட தொகுதியில் பல இடங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியேற்றி பேசினார். அம்பலவாணன்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.என்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் திலகர், செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் வேல்முருகன், வட்டார தலைவர்கள் ராஜா, ஜனார்த்தனன், நகர தலைவர் வைத்தியநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கேஎஸ் அழகிரி கூறியதாவது, ராகுல் காந்தி பதவி பறிப்பு நியாயம் இல்லை. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. பிரதமர் மோடி அரசு தவறு செய்துவிட்டது. ராகுல் காந்தி கர்நாடகாவில் பேசியதற்கு குஜராத்தில் தீர்ப்பு வந்துள்ளது. நீதிமன்றத்தில் நீதிபதியை மாற்றி, நீதியை வாங்கியுள்ளனர். இது எவ்வளவு ஜனநாயகத்திற்கு புறம்பானது என்று தெரிகிறது. நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடக்கூடாது என்பதற்காக பாஜக திட்டமிட்ட சதி செய்துள்ளது. இந்த எம்.பி.பதவி இல்லை என்றால் அவரால் உயிர் வாழ முடியாது என்று பொருள் அல்ல. இதை விடவும் வலிமையான அரசியல் செய்ய முடியும். அவருக்கு பதவி ஒரு பிரச்னை கிடையாது. இவ்வாறு கூறினார்.  

Related Stories: