சலவையகத்தில் தீ விபத்து: கண்ணாடி வெடிப்பு

கோவை: கோவை திருச்சி ரோடு சிங்காநல்லூர் பகுதியில் 3 மாடி கட்டடத்தில் டிரை கிளீனிங் சென்டர் உள்ளது. கீழ் தளத்தில் எலக்ட்ரிக்கல் கடையும், இரண்டாவது தளத்தில் டிரை கிளீனிங் சென்டரும், 3வது தளத்தில் ஆடிட்டர் அலுவலகமும் இயங்கி வந்தது. நேற்று மாலை, சூலூர் விமான நிலையத்தில் ஊழியராக பணியாற்றும் விஷால் (40) என்பவர் நடத்தி வந்த டிரை கிளீனிங் சென்டரில் தீ பரவியது. இதில் இருந்த கண்ணாடிகள் வெடித்து சிதறி ரோட்டில் விழுந்தது. அந்த பகுதி மெயின் ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகள் மீது கண்ணாடி சிதறியது.

இது தொடர்பாக பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். தீ வேகமாக பரவிய நிலையில் சுமார் 1 மணி நேரத்தில் தீ கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து அணைக்கப்பட்டது. இதில் வாசிங் மெசின், துணிகள் மற்றும் பல்வேறு தளவாட  பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. வாசிங் மெசின் நீண்ட நேரம் இயங்கியதால் அதிக வெப்பம் மற்றும் மின் ஒயர் பழுது போன்றவற்றால் தீ பிடித்திருக்கலாம் என தீயணைப்பு துறையினர் சந்தேகிக்கின்றனர். தீ பிடித்த நிலையில், கண்ணாடிகள் வெடித்து சிதறியது. அப்போது வெடி விபத்து போல் சத்தம் கேட்டதால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்தனர். தீ அணைக்கப்பட்ட பின்னரே பதட்டம் நீங்கியது. இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: