கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓடியதால் பரபரப்பு

கடலூர், மார்ச் 24: கடலூர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓடினர். இதில் 4 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை ரயில்வே கேட் அருகே, இரண்டு சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர், அவர்களை அழைத்து விசாரணை நடத்தினார். அதில் இருவரும் கடலூர் அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுடன் சேர்ந்து மேலும் 4 பேர் தப்பியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

நள்ளிரவில் 6 சிறுவர்களும் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த வேப்ப மரத்தில் ஏறி வெளியே குதித்து தப்பி சென்றது தெரியவந்தது. அதில் இரண்டு பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். மேலும் தப்பி ஓடிய 4 பேர் குடும்பத்தினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வீட்டிற்கு வந்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது. மேலும் 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் சாவடியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 வயதிற்கும் குறைவான 13 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு கம்பி வலைகள் அடிக்கப்பட்டு மிகவும் உயரமான மதில் சுவர்கள் உள்ளன. இருப்பினும் இந்த 6 பேரும் மரத்தில் ஏறி தப்பி சென்றுள்ளது தெரியவந்தது. இந்நிலையில், தப்பியோடிய சிறுவர்களில் 2 பேர் கிள்ளையில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சென்று 2 சிறுவர்களையும் கடலூர் அழைத்து வந்தனர்.

Related Stories: