சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க முடிவு அனுமதிக்கப்பட்ட வழி தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும்

புவனகிரி, மார்ச் 23: சிதம்பரம், கடலூர் வழித்தடத்தில் முக்கிய நகரங்களாக விளங்குவது புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை. ஆனால் அனுமதிக்கப்பட்ட இந்த வழித்தடங்களில் சில தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்காமல் புறவழிச்சாலை வழியாக செல்கிறது. இது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை புவனகிரியில் நடந்தது. சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். இதில் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அசோக் நடராஜ், கபிலன், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் பங்கேற்றனர்.

பொதுமக்கள் சார்பில் புவனகிரியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கனகராஜன், வழக்கறிஞர் குணசேகரன், ராமன், பூரணன், மோகன், தியாகு, பரங்கிப்பேட்டை பயணிகள் நல சங்கத்தை சேர்ந்த கவுன்சிலர் அருள்முருகன், அர்ஷத், ஜமால் நாசர், மெஹ்ராஜ், சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற பலரும், புவனகிரி வழித்தடத்தில் பேருந்துகள் சரியாக வருவதில்லை. அதுபோல் பரங்கிப்பேட்டை நகருக்குள் அனுமதிக்கப்பட்ட பேருந்துகள் வராமல் வேறு சாலையில் செல்வதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடம் கேட்டால் பயணிகளை இழிவாக பேசுவதுடன், கேவலப்படுத்தி பயணிகளை நடுவழியில் கீழே இறக்கி விடுகின்றனர். இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது என பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

இவ்வாறு பொதுமக்கள் குறை சொல்வதும், அதற்கு அதிகாரிகள் பதில் சொல்வதுமாக ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் பொது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் அனைவரையும் அமைதிப்படுத்தினார். இதை தொடர்ந்து அவர் பேசுகையில், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் என அனைத்து பேருந்துகளும் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும். அரசு அதிகாரிகள் என்பவர்கள் மக்களின் சேவைக்காகத்தான் பணியாற்றுகின்றனர். அதனால் பேருந்துகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்வதையும், பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். புகார்கள் வரும்போது அதுகுறித்து நடவடிக்கையும் எடுக்கிறார்கள்.

தனியார் பேருந்துகள் இந்த நடைமுறையை சரிவர கையாளுவது இல்லை என பல்வேறு புகார்கள் வந்திருக்கிறது. அதனால் தனியார் பஸ்கள் ஒழுங்கான முறையில், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். அதுபோல் பயணிகளிடமும் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரித்து பேசினார். மேலும் இந்த கூட்டத்தில், எந்தெந்த பேருந்துகள் எந்தெந்த வழித்தடத்தில் இயங்கும் என்பதை ஒரு வார காலத்திற்குள் அட்டவணை வெளியிடப்படும் என்றும், புவனகிரி பஸ் நிலையம், பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சமூக அமைப்புகளின் உதவியுடன் சிசிடிவி கேமரா பொருத்தி அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயங்குகிறதா என்பது குறித்து கண்காணிக்கப்படும். அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

Related Stories: