பூர்வீக மரங்களை அதிகளவில் நடுவதன் மூலம் மர இறக்குமதியை குறைக்க முடியும்

மேட்டுப்பாளையம்:   மேட்டுப்பாளையம் -  கோத்தகிரி செல்லும் சாலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தொழில்துறை வேளாண் வனவியல் கூட்டமைப்பின் வருடாந்திர கருத்தரங்கம் நேற்று கல்லூரி முதல்வர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, கல்லூரி வளாகத்தில் சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன.  நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலரும் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் தலைமை இயக்குநருமான தீபக்   வஸ்தவா கலந்து கொண்டு பேசுகையில்,``நம் நாட்டின் பூர்வீக மர இனங்களை அதிகளவில் நடுவதன் மூலம் மர இறக்குமதியை குறைக்க கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் குறிக்கோளான வனப்பகுதியை 23.69 சதவீதத்தில் இருந்து 33 சதவீதம் ஆக அதிகரிக்க 12,000 ச.கிமீ பரப்பளவில் மரங்கள் நட வேண்டிய கட்டாயத்திலும் உள்ளோம்.

இதில், 8000 முதல் 10 ஆயிரம் ச.கிமீ பரப்பளவானது விவசாய நிலங்களில் மரம் நடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். மேலும், பசுமை தமிழ்நாடு இயக்கமானது மக்களின் திட்டமாக செயல்பட வேண்டும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள்,அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களும் அரசாங்கத்துடன் கைகோர்க்க வேண்டும் என்றார்.  இக்கருத்தரங்கில் தொழில்துறை வேளாண் காடுகளின் பல்வேறு அம்சங்கள், மர வளர்ப்பு நடைமுறைகள், மரங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பற்றிய செயல் விளக்கம் சந்தை வாய்ப்புகள் பற்றிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.  இதனை தொடர்ந்து, மரம் சார்ந்த ஆற்றல் திட்டம் மற்றும் நபார்டு வங்கியின் வேளாண் வனவியல் சார்ந்த தொழில் ஊக்குவிப்பு மையம் உள்ளிட்டவை தொடங்கி வைக்கப்பட்டன. மேலும் தமிழக அரசின் கீழ் செயல்படும் தொழில் முனைவு மற்றும் புத்தாக்க நிறுவன புத்தாக்க பற்று சீட்டு திட்டத்தின் மூலம் தொழில் முனைவோருக்கு நிதி உதவியும் அளிக்கப்பட்டது. மேலும், சிறப்பாக செயல்பட்ட வேளாண் வனவியல் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறந்த விவசாயிக்கான விருது சரவணன், கோயம்புத்தூர் வேளாண் காடு உற்பத்தியாளர் அமைப்பு சிறந்த எப்பிஓ விருதையும், சிறந்த குளோனல் நர்சரிக்கான விருதினை கே-3 நாற்றங்கால் உரிமையாளர் ராமமூர்த்தி, சிறந்த மதிப்பு கூட்டல் துறை விருது குருவாயூரப்பன், வாழ்நாள் சாதனையாளர் விருது யோகநாதன் மற்றும் ஜெகன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி மையத்தின் இயக்குனர்   சுரேஷ் குமார், நபார்டு வங்கியின் கோவை மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமல் ராவ், கோவை ஐடிசி நிறுவன முதன்மை மேலாளர் வீரமணி, வனங்களுக்கு வெளியே மரங்கள் திட்டத்தின் துணை இயக்குனர் மனோஜ் தபாஸ், வனக்கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவர்கள் என 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கம் இன்றும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதியாக மேட்டுப்பாளையம் வன கல்லூரியின் வனவிலங்கு துறை  தலைவர் சேகர் நன்றியுரை ஆற்றினார்.  வன நாள் கொண்டாட்டம்

Related Stories: