கோவை மாவட்ட திமுக செயலாளர் பாராட்டு தமிழக பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு வரவேற்கக்கூடியது

கோவை, மார்ச் 21: தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024 மருத்துவத்துறை அறிவிப்புகள் குறித்து தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ராஜேஷ் கண்ணா கூறியதாவது: தமிழ்நாடு பட்ஜெட் 2023-ல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது சுமார் ரூ.760 கோடி அதிகமாகும். தமிழக அரசின் முன்னோடி திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், தொற்றா நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.  அரசு, தொழிற்சாலைகளிலும், கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஒரு சிறப்பு முயற்சியைத் தொடங்க உள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளில் உள்ள 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களும் பயனடைவர் என்று அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. மக்களை தேடி மருத்துவ திட்டதில் முக்கிய பங்கு வகிக்கும் பிசியோதெரபி மருத்துவர்களின் பணியை நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த ஆண்டில்‌ மட்டும் 1172 ஹெல்த் சப் சென்டர் மற்றும் 50 சமுதாய மையம் மூலம் சுமார் 463 பிசியோதெரபி மருத்துவர்கள் 6,97,145 நோயாளிகளுக்கு அவர்களது இல்லத்திற்கு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த மக்களை தேடி மருத்துவத்தை விரிவுபடுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைவார்கள் மற்றும் புதிய பிசியோதெரபி மருத்துவ பணி இடங்கள் உருவாகும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 11.82 லட்சம் நோயாளிகளுக்கு 993 கோடி ரூபாய் மதிப்பிலான உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

அதேபோல் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பிசியோதெரபி சிகிச்சையை சேர்த்து ஏழை எளிய மக்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யவேண்டும். ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த தமிழ்நாடு மாநில பிசியோதெரபி கவுன்சில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வட்டார மருத்துவமனைகளில் பிசியோதெரபி மருத்துவ பிரிவு தொடங்கப்படும் என்ற வாக்குறுதியை சட்டமன்ற மருத்துவ மானிய கோரிக்கை விவாதத்தில் நிறைவேற்றி தர அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: