மருதமலை அடிவாரத்தில் தினசரி வாடகைக்கு கடைகள் வைக்க அனுமதி: கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு

கோவை, மார்ச் 21: கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள், தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். இதில் மருதமலை உற்சவகால கடை வியாபாரிகள் சார்பில் அளித்த மனுவில், ‘‘மருதமலை அடிவாரத்தில் நாங்கள் 25 ஆண்டு காலமாக வியாபாரம் செய்து வருகிறோம். இதுவரை தினசரி வாடகையாக கடைகள் ஒவ்வொன்றிற்கும் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வழங்கி வந்தோம். ஆனால், தற்போது தினசரி வாடகை ரத்து செய்யப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு கடைகளையும் தனித்தனியாக ஏலம் விடப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனால் ஏழை, எளிய மக்களாகிய நாங்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கடை நடத்தும் விதவை பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை மொத்தப் பணத்தையும் செலுத்தி கடைகளை ஏலம் எடுக்க முடியாத நிலையில் உள்ளோம். இதைக்கருத்தில் கொண்டு, இத்தனை ஆண்டுகளாக இருந்த தினசரி வாடகை நடைமுறையே மீண்டும் தொடர செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அரவிந்த் (20) அளித்த மனுவில், நான் கோவை சரவணம்பட்டியில் அறை எடுத்து தங்கியிருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிடெக் ஐடி படித்து வருகிறேன். இந்நிலையில், கடந்த மாதம் முதல் வாரத்தில் சாலை விபத்தில் சிக்கி எனது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால், கல்லூரிக்கு 25 நாட்களாக செல்ல முடியவில்லை. அதன் பின்னர், கல்லூரிக்கு சென்றபோது, அதிக நாட்கள் விடுப்பு எடுத்ததால் மீண்டும் கல்லூரியில் சேர்க்க மறுக்கின்றனர். இதனால் எனது எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே, மீண்டும் அதே கல்லூரியில் நான் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். விஷ்வ ஹிந்து பரிசத் பஜ்ரங்தள் அமைப்பினர் அளித்த மனுவில், கோவை மாநகர் முழுவதும் பல இடங்களில் பசுமாடுகள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி சுற்றி திரிந்து வருகின்றன. இதனால், வாகனம் ஓட்டுபவர்களுக்கு இடையூறாக உள்ளது. அது மட்டுமல்லாமல், விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் வாகன ஓட்டிகளும், பசு மாடுகளும் காயமடைந்ததுடன், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பசு மாடுகளை ரோட்டில் விடும் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: