ஊராட்சி ஒன்றிய கூட்டம் திமுக கவுன்சிலர் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம்

பண்ருட்டி, மார்ச் 21: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். பிடிஓக்கள் சித்ரா, கயற்கண்ணி, மேலாளர் சுடர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் குமரகுரு (திமுக): ஒவ்வொரு ஒப்பந்ததாரர்களை புதியதாக பதிவு செய்யும் போது அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு தான் பதிவு செய்து வருகிறார்கள். எந்த பணிகள் செய்ய வந்தாலும் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை பணம் பெற்றுக்கொண்டு வருகிறார்கள்.

போதிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்பதை கூடுதல் ஆட்சியரிடம் நேரில் தெரிவிப்பேன் என கூறி ஆவேசமாக தீர்மான நகலை கிழித்து எறிந்து தூக்கி வீசினார். மேலாளர் சுடர்வேல்: எந்த அதிகாரியும் பணம் பெற்றுக்கொண்டு ஒப்பந்ததாரரை பதிவு செய்யவில்லை. நிரூபிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அதிகாரிகள் அனைவரும் வெளியே போராட்டம் செய்வோம் என்றார். விசிக உள்ளிட்ட பல கவுன்சிலர்கள் சமாதானம் செய்ய முயன்ற போதும் முடியவில்லை. தொடர்ந்து குமரகுரு  வெளியே சென்று போராட்டத்தில் குதிப்பேன் எனக் கூறி விட்டு வேகமாக வெளியே சென்றார். அமைதியாக கூட்டம் நடத்த கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என சேர்மன் ஜானகிராமன் கேட்டுக்கொண்டார்.  இதையடுத்து அவசர அவசரமாக கூட்டம் முடிக்கப்பட்டு கவுன்சிலர்கள் அனைவரும் வெளியே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: