கரிவெட்டி கிராமத்தில் பதற்றம் நிலம் அளவீடு செய்ய வந்த என்எல்சி அதிகாரிகளை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி

சேத்தியாத்தோப்பு, மார்ச் 21: கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு என்எல்சி நிர்வாகத்திடம் உரிய இழப்பீடு கேட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் நேற்று திடீரென நெய்வேலி என்எல்சி அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்ய சென்றனர். அப்போது கிராம மக்கள், அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில், எங்களுக்கான நிரந்தர வேலை, வீடு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 லட்சம் என்ற எந்த கோரிக்கையும் இதுவரை செய்து தரவில்லை. ஆனால் தற்போது நிலங்கள் அளவீடு செய்ய வந்துள்ளீர்கள் எனக் கூறி என்எல்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரை இங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தினர்.  இதனை என்எல்சி அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆத்திரமடைந்து என்எல்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது கிராம மக்கள் மற்றும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இச்சம்பவத்தை தொடர்ந்து என்எல்சி அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியை நிறுத்திவிட்டு அவசர, அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Related Stories: