கடலூர் உழவர்சந்தையில் கள்ளநோட்டு புழக்கம்

கடலூர், மார்ச் 21: கடலூர் உழவர்சந்தையில் 100க்கும் மேற்பட்ட பழக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளன. இங்கு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள், தங்களது பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை கடலூர் அருகேயுள்ள எஸ் புதூர் கிராமத்தை சேர்ந்த நீலா என்கிற மூதாட்டி வாழைதார்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், மூதாட்டியிடம் இரண்டு 200 ரூபாய் தாள்களை கொடுத்து, வாழைதார்களை வாங்கி சென்றுள்ளார். இதையடுத்து நீலா அந்த இரண்டு 200 ரூபாய் நோட்டுகளை வேறொரு கடைக்கு சென்று கொடுத்து பொருட்கள் வாங்கும்போது சந்தேகமடைந்த வியாபாரி, இரண்டு தாள்களும் கள்ளநோட்டுகள் என்று தெரியவந்தது. பின் அந்த மூதாட்டி உழவர்சந்தையில் உள்ள வியாபாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்தார். இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடலூர் உழவர்சந்தையில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட்டிலும் ஒரு பெண்ணிடம் ரூ.200 கள்ளநோட்டை கொடுத்து மீன்வாங்கி சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ கடலூர் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: