கொள்முதல் விலையை உயர்த்த கோரி சாலையில் பாலை ஊற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தொண்டாமுத்தூர், மார்ச் 20: கோவை ஆவின் நிர்வாகத்திற்கு பால் வழங்கும் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையான பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட விவசாய சங்கம் இணைந்து பால் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கோவை சிறுவாணி சாலை ஆலந்துறை, நாதேகவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 150 லிட்டர் பாலை சாலையில் கொட்டி தங்கள் எதிர்பை தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மாட்டு தீவன மானியத்தை வழங்க வேண்டும். பால் விலையை உயர்த்த வேண்டும். ஊக்கத்தொகையை வழங்கிட வேண்டும்.

பால் விலையை உயர்த்தி பால் லிட்டருக்கு ரூ.50 நிர்ணயம் செய்ய வேண்டும். சங்க பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு காப்பீடு முழுமையாக வழங்க பால் உற்பத்தியாளர்கள் வருடாந்திர ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் 150க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழக விவசாய சங்க தொண்டாமுத்தூர் வட்டாரத் தலைவர் ஆறுச்சாமி கூறுகையில், ‘‘பால் விலை விவசாயிகள் உற்பத்தி செய்யும் எந்த பொருட்களுக்கும் விலை இல்லை. பால் விற்கும் விலையில் மாடுகளை வைத்து பராமரிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஒரு மாட்டுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு பராமரிப்பு செலவு 250 ரூபாய் ஆகிறது.

நஷ்டத்திற்கு இடையே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆவின் பாலகம் உற்பத்தி லாப தொகை, ஊக்கத்தொகை போன்றவற்றை எதுவுமே கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவில் ஒரு லிட்டருக்கு பால் ரூ.48 கொடுக்கிறது. கேரள அரசு ஒரு லிட்டருக்கு 16 ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளது. எனவே தமிழக அரசு நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும். பால் விலையை உயர்த்த வில்லை என்றால் ஒரு வாரத்தில் பச்சாபாளையம் பகுதியிலுள்ள ஆவின் பாலகம் முற்றுகையிடப்படும்’’ என தெரிவித்தார்.

Related Stories: