பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்

கோவை, மார்ச் 19:  கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்கங்களின் கூட்டு கமிட்டியினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகரில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பத்தினர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ரேபிட்டோ என்ற கார்ப்பரேட் நிறுவனம் டூவீலரை வாடகை டாக்சியாக பயன்படுத்துகிறது. இத்தகைய செயல் மோட்டார் வாகன சட்டத்தின் படி குற்றம் என தெரிந்தும் ரேபிட்டோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் டில்லியில் இந்த ரேபிட்டோ பைக் டாக்சி தடை செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதே போல், தமிழகத்திலும் தடை செய்ய கோரி ஆட்டோ தொழிலை நம்பி உள்ள 3 லட்சம் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் இதை தொழிலாளாக கருதி தங்களது சொந்த பைக்கை வாடகை டாக்சியாக பயன்படுத்தி வருகின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபத்திற்காக படித்த இளைஞர்கள் செயல்படுகிறார்கள்.  கோவை மாநகரில் இதனால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், பைக் டாக்சி ஓட்டுபவர்களுக்கும் சிறு, சிறு தகராறு அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.

எனவே, கோவை மாவட்டத்தில் ரேபிட்டோ பைக் டாக்சியை தடை செய்து ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். முன்னதாக, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டு குவிந்தனர். அவர்கள் பைக் டாக்சியை தடை செய்ய வலியுறுத்தினர். ரேஸ்கோர்ஸ் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: