கோவை சிறை இடமாற்றம்: கூடுதல் செயலாளர் ஆய்வு

கோவை, மார்ச் 19:  கோவை மத்திய சிறை அமைந்துள்ள இடத்தில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறை வளாகம் 165 ஏக்கரில் இருக்கிறது. 1872ம் ஆண்டில் கட்டிய இந்த சிறையில் 2,250 கைதிகள் அடைக்க அறை வசதிகள் இருக்கிறது. தற்போது 1850 கைதிகள் உள்ளனர். கோவை சிறையை காரமடை அருகேயுள்ள பிளிச்சி கிராமத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக, பல்வேறு முறை ஆய்வுகள் நடத்தப்பட்டது. வருவாய்த்துறை மற்றும் பூமி தான இயக்கத்திற்கு சொந்தமான நிலங்கள் இந்த கிராமத்தின் வன எல்லையோர பகுதியில் இருக்கிறது. இங்கே 120 ஏக்கர் நிலத்தை தானமாக பெற சிறைத்துறை நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.

பல்வேறு அரசு உத்தரவுகளின் அடிப்படையில் முதல் கட்டமாக 95 ஏக்கர் நிலம் சிறைத்துறையினருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, நேற்று தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் (உள்துறை, மதுவிலக்கு அமலாக்கம்) பணீந்தர ரெட்டி கோவை வந்தார். சிறையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர் ஆய்வு நடத்தினார். சிறை தொழில் கூடம், கைதிகள் தங்கும் அறை, சமையல் கூடங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் பிளிச்சிக்கு சென்றார். அங்கே சிறை அமைக்கப்படும் இடத்தை பார்வையிட்டார். சிறை வளாகம் எப்படி கட்டுவது, பாதுகாப்பு வசதிகளை எப்படி செய்வது, கட்டுமானம் மேற்கொள்ள போதுமான இடவசதி இருக்குமா, கைதிகள் தங்குவதற்கு எத்தனை அறைகள் கட்ட முடியும் என அவர் ஆலோசனை செய்தார்.

அவருடன் கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முக சுந்தரம், சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உள்ளிட்டோரும் சென்று இடத்தை பார்வையிட்டனர். விரைவில், பிளிச்சி பகுதியில் சிறை கட்டுமான பணிகள் துவக்க தேவையான ஆலோசனைகளை கூடுதல் செயலாளர் வழங்கியுள்ளார். வருவாய்த்துறை மற்றும் பூமிதான இயக்கத்தின் வசம் இடம் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் கோவை சிறை நிர்வாகத்தை செம்மொழி பூங்கா நிர்வாகத்தினர் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: