மாவட்டத்தில் கொரோனா, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் கண்காணிப்பு வளையத்தில் 12 ஆயிரம் கர்ப்பிணிகள்

கோவை, மார்ச் 17:  கோவை மாவட்டத்தில் கொரோனா, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக 12 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்களை கண்காணித்து வருவதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல், கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. வைரஸ் காய்ச்சல் பாதிப்பினால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதே போல், கொரோனாவால் சராசரியாக 8 முதல் 10 பேர் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, கொரோனா பாதிப்பு காரணமாக 68 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பொதுமக்கள் மாஸ்க் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தவிர, நகர் மற்றும் ஊரக பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக, சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக காய்ச்சல் பாதிப்புகள் குறைய துவங்கியுள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள கர்ப்பிணி தாய்மார்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் அல்லது வேறு ஏதாவது பாதிப்புகள் உள்ளதா? என கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் இறங்கியுள்ளனர். கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது: மாவட்டம் முழுவதும் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, 12 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு காய்ச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கிறதா? என கண்டறியப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கிராம, நகர சுகாதார செவிலியர்கள் கர்ப்பிணி தயார்மார்களை நேரடியாக அல்லது போனில் தொடர்பு கொண்டு அவர்களின் உடல் நிலை குறித்து கண்காணிக்கவும், பாதிப்புகள் இருப்பது தெரியவந்தால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அறிவுரைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் ஒரு நாள் காய்ச்சல் இருந்தால் கூட அலட்சியம் காட்ட கூடாது. உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தவிர, துணை இயக்குனர் அலுவலகத்தில் கன்ட்ரோல் ரூம் துவங்கப்பட்டு அதன் மூலமாகவும் கர்ப்பிணிகளின் நிலை குறித்து கண்டறியப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் தொடர்பான சிகிச்சை அளிப்பது குறித்து அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சைப்பெற வேண்டும். மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம். அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வெளியில் சென்று வந்தவுடன் கிருமி நாசினியை பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: