கோடை வெயில் தாக்கம் வ.உ.சி பூங்கா விலங்குகள், பறவைகளுக்கு ஷவர் குளியல்

கோவை, மார்ச் 17:  கோவை வ.உ.சி பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளுக்கு ஷவர் குளியல் அளிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், நடப்பாண்டில் மார்ச் மாதம் துவக்கம் முதலே வெயில் வாட்டி வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் வருகிறது. வனப்பகுதி, குளங்களில் வறட்சி ஏற்பட்டு வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மனிதர்கள் மட்டுமின்றி வனவிலங்குகள், பறவைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை வஉசி உயிரியல் பூங்காவில் வாத்து, புறா மற்றும் சாரஸ் கிரே, பெயிண்டர்ட் ஸ்டார்க், கிரே பெலிக்கன், ரோசி பெலிக்கன், ஈமு உள்ளிட்ட பறவைகள் உள்ளன.

இவை தவிர கடமான், குரங்குகள், ஒட்டகம் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், பாம்புகளும் உள்ளன. இங்குள்ள பறவைகள், விலங்குகள் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. இதையடுத்து, பறவைகளுக்காக கடந்த சில நாட்களாக வாட்டர் ஸ்பிரேயர் மூலமாக குளியல் செய்யப்படுகிறது. கோடை வெயில் தாக்கம் அதிகமானால் இரண்டு முறை குளிப்பாட்ட திட்டமிட்டுள்ளனர். பாம்புகளுக்கு பெரிய அளவிலான டப் வைத்து அதில் நீர் நிரப்பி வைத்துள்ளனர். இந்த நீரில் பாம்புகள் வெயில் தாக்கத்தை தணித்து கொள்கின்றன. மேலும், பறவை, விலங்குகளுக்கான உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காய்கறி, பழங்கள் வாத்து, மான், எலி, மயில் போன்றவைக்கும் அளிக்கப்படுகிறது. குரங்குகளுக்கு தர்பூசணி போன்றவை வழங்கப்படுகிறது. கடமான்களுக்கு பிரத்யேகமாக ஸ்பிரேயர் மூலம் குளியல் நடக்கிறது. வெயிலின் தாக்கம் குறையும் வரை வஉசி பூங்கா விலங்குகள், பறவைகளுக்கு ஷவர் குளியல் நடத்தப்படும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், தற்போது வஉசி உயிரியல் பூங்காவிற்குள் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: