×

துணை வேந்தர் அலுவலகம் முன்பு மாணவிகள் பெற்றோருடன் தர்ணா

ஓமலூர், மார்ச் 16: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், நன்னடத்தை சான்றிதழில் குளறுபடி கண்டித்து, மாணவிகள் தங்களின் பெற்றோருடன், துணை வேந்தர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறையில் சேலத்தை சேர்ந்த உஷா, மேச்சேரியை சேர்ந்த சரண்யா, ஜீவிதா உள்பட 9 மாணவர்கள் கடந்தாண்டு எம்ஏ., படித்து முடித்தனர். இதை அடுத்து தங்களது படிப்பு சான்றிதழை பெற, மாணவிகள் நேற்று பல்கலைக்கழகத்திற்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுச்சான்றிதழின் நன்னடத்தை பிரிவில், திருப்தி இல்லை என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் தங்களது சான்றிதழை வாங்காமல் சென்ற மாணவிகள், தங்களது பெற்றோருடன் வந்து துறை தலைவர் அலுவலகத்தில் கேட்ட போது, அவர் முறையான பதில் அளிக்காமல் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று மதியம் 2வது நாளாக பல்கலைக்கழக துணை வேந்தரை சந்திக்க மாணவிகள், தங்களின் பெற்றோர்களுடன் வந்தனர். அப்போது துணை வேந்தர், அவர்களை சந்திப்பதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், துணை வேந்தர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்ேபாது தங்கப்பதக்கம் பெற்ற மாணவியின் சான்றிதழில், திருப்தி இல்லை என்று குறிப்பிட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் செயலில் பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினர்.

 மேலும், வரலாற்று துறை பேராசிரியர் பிரேம்குமார், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சங்கத்தில் பொறுப்பில் உள்ளார். பல்கலைக்கழக நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில், இவர் மீது திட்டமிட்டு அளிக்கப்பட்ட பொய் புகாரின் அடிப்படையில், கடந்தாண்டு பாலியல் வழக்கில் கைது செய்யப் பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்று சக மாணவர்களோடு சேர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கபட்டது. அப்போதே அதற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு படிப்பை முடித்த தங்களுக்கு சான்றிதழ் வழங்காமல், காலதாமதம் செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது 4 பேரின் மாற்று சான்றிதழில், நன்னடத்தைக்கான இடத்தில் திருப்தி இல்லை என குறிப்பிடப்பட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால், உயர்கல்வி வாய்ப்பும் எதிர்காலமும் பாதிக்கப்படும். அரசு மற்றும் தனியார் துறையின் வேலை வாய்ப்புகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. அதனால், தங்கள் பிள்ளைகளுக்கு, அந்த சான்றிதழுக்கு மாற்றாக நன்னடத்தை நன்று என புதிய சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பல்கலைக்கழக பதிவாளர் பாலகுருநாதன், மாணவிகளிடம் கடிதம் பெற்று துணை வேந்தருக்கு அனுப்பி வைக்கப்படும். புதிய மாற்று சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை துணைவேந்தர் எடுப்பார் என்று தெரிவித்தார். இதையடுத்து மாணவிகளிடம் கடிதம் பெறப்பட்டுள்ளது.

Tags : Deputy Chanderer's Office ,Dirna ,
× RELATED எதிர்க்கட்சி வேட்பாளர்களின்...