மதுக்கரை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான பைக் ரேசில் கலந்து கொண்ட வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி மேட்டூர் ஜெகதீஷ் ஏற்பாட்டில் தளபதி டிராபிக்கான இரண்டாம் ஆண்டு பைக் ரேஸ் போட்டி நேற்று நடைபெற்றது. கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி எதிரிலுள்ள மைதானத்தில் நடைபெற்ற போட்டி துவக்க நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் கார்த்திக், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரகாஷ், வார்டு செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.