ஒத்தக்கடை கோயில் நிலத்தில் கழிவுகள் கொட்டும் விவகாரம் பஞ்சாயத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோர்ட் உத்தரவு

மதுரை: கோயில் நிலத்தில் கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில் பஞ்சாயத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த பொன்.கார்த்திகேயன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஒத்தக்கடையிலுள்ள கோதண்டராமசாமி கோயிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் காவல் நிலையம் எதிரே உள்ளது. இந்த இடத்தில் சில்வர் பட்டறை கழிவுகள், கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. எனவே, கோயில் நிலத்தில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.ேக.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் கமிஷனர் சிவக்குமார் தரப்பில் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட நிலத்தில் கோழி கழிவுகள், ரசாயன கழிவுகள் மற்றும் சில்வர்பட்டறை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. ஒத்தக்கடை ஊராட்சியின் குப்பை வண்டிகள் அங்கு தான் நிறுத்தப்படுகிறது. பொதுப்பணித்துறை கால்வாயில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அந்தப்பகுதி மாசடைந்துள்ளது என அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், ஒத்தக்கடை ஊராட்சியில் தனது பணியை முறையாக செய்யத் தவறிய அலுவலர்கள் மீது பஞ்சாயத்து சட்டப்படி கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியை எஸ்பி நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தரப்பில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத்துறை தரப்பில் சேதமடைந்த வேலியை சீரமைக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: