விருப்பாட்சிபுரம் பகுதியில் இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களுக்கு நிலா திருவிழா

வலங்கைமான்: வலங்கைமான் அடுத்த விருப்பாட்சிபுரம் பகுதியில் இல்லம் தேடி கல்வி மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு நிலா திருவிழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தேசிய அறிவியல் தினத்தைத்தையொட்டி, தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ், அஸ்ட்ரோனாமிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா, பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து “நிலா திருவிழா 2023“ என்ற நிகழ்வு வலங்கைமான் விருப்பாட்சிபுரம் இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைப்பெற்றது. இதில் வானவியல் அறிஞர் பரமேஸ்வரன் பள்ளி மாணவர்களுக்கு தொலைநோக்கி மூலம் நிலா, வியாழன், செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களையும், வானில் தெரியக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களையும் மாணவர்களுக்கு காட்டினார்.

இந்த நிகழ்வின்போது, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி குறித்து வலங்கைமான் வட்டார இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் நிர்மல் கூறியதாவது: மாணவர்களிடையே வானியல் மற்றும் அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும், அதிகரிக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாநகரம் மற்றும் நகரங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுப்பது கிராம புற மாணவர்களுக்கு சிறப்பாக அமையும் என கூறினார். இதில் இல்லம் தேடிக் கல்வி மாவட்ட குழு உறுப்பினர் புவனேஸ்வரி, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: