கறம்பக்குடி அருகே காளியம்மன்கோயில் விழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி

கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே காளியம்மன் கோயில் சந்தனகாப்பு விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காளைகளை வீரர்கள் அடக்குவதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவுக்குட்பட்ட மாங்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் சந்தனகாப்பு விழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் நான்காம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வடமாடு மஞ்சு விரட்டு போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 11 காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையையும் அடக்க 9 வீரர்கள் கொண்ட குழுவினரை வடமாடு மஞ்சு விரட்டு குழுவினர் அனுமதித்தனர். இந்த வடமாடு மஞ்சு விரட்டு போட்டியை கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக வீரர்களுக்கு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். வடமாடு மஞ்சுவிரட்டில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளைகைள அடக்கிய வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. வடமாடு மஞ்சு விரட்டு போட்டியை சுற்று வட்டார கிராம பொது மக்கள் பார்வையிட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் காவல் துறையினர் செய்திருந்தனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் பொது மக்கள் இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: