பனியன் குடோன் ஊழியரிடம் ரூ.17 லட்சம் வழிப்பறி வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு

திருப்பூர்,பிப்.26:திருப்பூர் பெரிய கடைவீதியை  சேர்ந்தவர் சபுதீன் (44). இவர் காங்கேயம் சாலை ராக்கியாபாளையம் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் வைத்து தொழிலில் ஈடுபட்டிருந்தார். தொழில் நிமித்தமாக பணம் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் சபுதீன் திருப்பூர் அவிநாசி சாலை குமார்நகர் அருகே உள்ள முருங்கபாளையம் வீதியில் உள்ள ஒருவரிடம் ரூ. 17.50 லட்சத்தை வாங்கி வருமாறு கூறி,  அவரிடம் வேலை செய்யும் சாகுல் ஹமீது (32) என்பவரை கடந்த 19ம் தேதி அனுப்பி வைத்தார்.

சாகுல் ஹமீது இருசக்கர வாகனத்தில் முருங்கபாளையம் சென்றார். அங்குள்ள பனியன் நிறுவனத்தில் இருந்து ரூ. 17.50 லட்சத்தை ஒரு பையில் வாங்கி கொண்டு சாகுல் ஹமீது அங்கிருந்து புறப்பட்டார். அங்கிருந்து வெளியேறிய சில நிமிடங்களில், இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள், சாகுல் ஹமீது பயணித்த இருசக்கர வாகனத்தை திடீரென வழி மறித்தனர். சாகுல்ஹமீதுவிடம் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பினர். இது தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று முன் தினம் மோகன்குமார், கார்த்திக், அசோக், சதிஷ், ஜெகதீஷ், பிரகாஷ், சசிக்குமார் ஆகிய 7 பேரை பிடித்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் கூறியதாவது: 7 பேரிடம்  தொடர்ந்து விசாரித்து வருகிறோம். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை  முடியாமல் இருப்பதால், தற்போது மற்ற விவரங்களை சொல்ல இயலாது. என்றனர்.

Related Stories: