திருப்பூர் மாவட்டத்தில் பகிர்மான குழு தலைவர் தேர்தல் மார்ச் 10-ம் தேதி நடக்கிறது

உடுமலை,பிப்.26:பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து 3.75 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் பாலாறு படுகையில் 134 - கிராம நீரினைப் பயன்படுத்துவோர்  சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு  ஏற்கனவே தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்று சில மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால் அதற்கு அடுத்த கட்டமாக நடத்தப்படும் பகிர்மானக்குழு தலைவர், பகிர்மானக் குழு  உறுப்பினர்கள் மற்றும் திட்டக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படாமலேயே இருந்தது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7 பகிர்மானக்குழுத் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், இதற்கான தேர்தல் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: பகிர்மான குழு தலைவர் பதவிக்கான வேட்பு மனுக்கள் மார்ச் 10ம் தேதி காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை உடுமலை மற்றும் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பெறப்படும். 10 மணி வரை மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 10.30 மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். வேட்பாளர் இறுதிப் பட்டியல் 10.45 மணிக்கு வெளியிடப்படும். காலை 11.30 முதல் பிற்பகல் 12.15 மணி வரை தேர்தல் நடைபெறும். உடனடியாக வாக்குகள் எண்ணப்படும்.

இதேபோல், பகிர்மான குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுக்கள் மார்ச் 10ம் தேதி மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை பெறப்படும். 3 மணி வரை மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 3.30 மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். வேட்பாளர் இறுதிப்பட்டியல் 3.45 மணிக்கு வெளியிடப்படும். மாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை தேர்தல் நடைபெறும். உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: