செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பிள்ளையார்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல்

வல்லம், பிப்.24: தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல் செய்ய ஊராட்சித் தலைவர் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதை இப்பகுதியில் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கோர்ட் அனுமதியுடன் செல்போன் டவரில் டெக்னிக்கல் இணைப்புகள் வழங்க பிள்ளையார்பட்டிக்கு வந்தனர். இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் ஊராட்சித் தலைவர் உதயக்குமார் தலைமையில் சாலைமறியல் செய்ய முயன்றனர்.

தகவலறிந்த தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது போலீசார் வாகன கண்ணாடியை சிபிஎம் கட்சியை சேர்ந்த சண்முகவேல் (53) உடைத்துள்ளார். தொடர்ந்து சாலைமறியல் செய்ய முயன்ற ஊராட்சித் தலைவர் உதயக்குமார், சண்முகவேல் உட்பட 13 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊராட்சித் தலைவர் உட்பட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிள்ளையார்பட்டி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் சாலைமறியல் தொடர்ந்து நடந்தது. இதையடுத்து ஊராட்சித் தலைவர் உதயக்குமார் உட்பட 12 பேரையும் போலீசார் விடுவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை விலக்கி கொண்டனர். போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தியதற்காக சண்முகவேலை மட்டும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: