கடலூர் எஸ்பி அலுவலகம் அருகே பரபரப்பு முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

கடலூர், பிப். 21: கடலூர் எஸ்பி அலுவலகம் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்திவிட்டு, ஹாட் டிஸ்க்கையும் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கடலூர் எஸ்பி அலுவலகத்தின் அருகே உள்ள ஆணைகுப்பத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயிலுக்கு நேற்று காலை கோயில் பூசாரி வேதமூர்த்தி வந்தபோது, கோயிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலில் இருந்த 2 உண்டியல்களில் ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

நேற்று முன்தினம் இரவு கோயிலில் பூஜை முடிந்து பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்ற பிறகு, நள்ளிரவு கோயிலுக்கு வந்த மர்ம நபர்கள் முதலில் கோயிலின் வெளியே இருந்த சிசிடிவி கேமராவின் ஒயர்களை துண்டித்துள்ளனர். பிறகு கோயிலின் உள்ளே சென்று அங்கு இருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்திவிட்டு, கோயிலில் இருந்த ஒரு உண்டியல் பூட்டை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும் மற்றொரு உண்டியலை திறக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதை திறக்க முடியாததால் அப்படியே விட்டுவிட்டனர். மேலும் மர்ம நபர்கள் கோயிலின் உள்ளே வந்தது போலீசாருக்கு தெரியாமல் இருப்பதற்காக, சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேகரித்து வைக்கும் ஹாட் டிஸ்க்கையும் திருடி சென்றுவிட்டனர். இந்த கோயிலில் கடைசியாக கடந்த ஆடி மாதம் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கடந்த 6 மாதங்களாக கோயில் உண்டியல் திறக்கப்படவில்லை. இதனால் அதிக அளவில் பணம் திருடு போயிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories: