மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டும் வலங்கைமான் வருவாய்த்துறை

வலங்கைமான்,செப்.27: மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான இருக்க இடம் என்ற தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்குவதில் வலங்கைமான் வருவாய்த்துறை முனைப்பு காட்டி வருகிறது. வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த இருளர் இனமக்களுக்கு வீட்டுமனை பட்டா நாளை (28ம் தேதி) வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டுமென்பதே அரசின் நோக்கமாகும். தகுதி வாய்ந்த வீடற்ற ஏழை மக்களுக்கு, கிராம நத்தமாக ஒதுக்கப்பட்ட நிலங்களிலிருந்து வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.

நீர்நிலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு நிரந்தர வீடு வழங்க வேண்டும் என்பதற்காகவும், இத்தகைய நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து உரிய செயல்பாட்டுக்கு உட்படுத்துவதற்காகவும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையின் மூலமாக தனியார் நிலங்களை கையகப்படுத்தி, ஏழை குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவை சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தபட்டு வருகின்றது. அதேபோல ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலான குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவை இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா அலுவலகம் 71 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை இருக்க இடம் என்ற அடிப்படையில் இருக்க இடம் வழங்குவதில் மாநிலம் முழுவதும் திமுக அரசு முனைப்பு காட்டுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓர் ஆண்டுக்குள் சுமார் 200க்கும் மேற்பட்ட பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (28ம் தேதி) நடைபெறும் மனுநீதி நாள் முகாமில் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது. வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அட்டமங்கலம் கிராமத்தில் 13க்கும் மேற்பட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சொந்தமாக வீட்டுமனை பட்டா இல்லாததால் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் தொகுப்பு வீடுகள் பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் உள்ளது. போதிய வருவாய் இன்றி வசிக்கும் இக்குடும்பத்தை சேர்ந்தோர் நிரந்தர வீடு இல்லாமல் கூரை வீடுகளில் பாதுகாப்பற்ற நிலையில் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டுமனை பட்டா வேண்டி கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. கடந்த திமுக ஆட்சியில் இக்குடும்பங்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கியபோது, இக்குடியிருப்புகள் அனைத்திற்கும் உடனடியாக இலவச மின்சாரம் வழங்கப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.

இக்குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என ஆதிச்சமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் துர்காதேவி வைரவேல் தொடர் முயற்சிகளை அடுத்தும் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மற்றும் வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் இவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் நாளை (28ம் தேதி) கீழ விடையல் ஊராட்சியில் நடைபெறும் மனுநீதி நாள் முகாமில் மாவட்ட கலெக்டர் வீட்டுமனைப் பட்டாக்களை பல ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேற்றும் வகையில் வழங்க உள்ளார். அதனை அடுத்து பயனாளிகள் தமிழக முதல்வருக்கும், வருவாய்த்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் சந்தான கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய் துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.மேலும் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட எழுபத்தி ஒரு வருவாய் கிராமங்களில் \”கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 82 நபர்களின் குடும்பத்தை சேர்ந்த வாரிசுகளுக்கு திமுக அரசின் உத்தரவுக்கு இணங்க தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.41 லட்சம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டு கால ஆட்சியில் 250க்கும் மேற்பட்ட முதியோர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள் ஆகியோருக்கு புதிதாக மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகுதியான 75க்கும் மேற்பட்ட பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் வருவாய்த்துறையின் மூலம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மீட்பு கால பயிற்சிகளும் வருவாய்த்துறையின் மூலம் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் வலங்கைமான் வருவாய்த்துறை முனைப்பு காட்டி வருகிறது.

Related Stories: