மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமைப்படுத்த நடவடிக்கை

கடலூர், செப். 24:  கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்து வந்தது. மேலும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும் நிலையில் வீணாக கடலில் கலந்து வரும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. ஊரக வளர்ச்சி துறை சார்பில் எதிர்வரும் காலம், மழைக்காலங்கள் என்பதால் மழைநீர் சேமிக்கும் நோக்கத்தோடு மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இதன் ஒரு பகுதியாக கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பணாம்பாக்கம் ஊராட்சியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடக்க விழா ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணியை தொடங்கி வைத்தார். கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, அசோக் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி முருகன் வரவேற்றார். மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை முழுமைப்படுத்த கடலூர் மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அரசு அலுவலகங்கள், அரசு பள்ளி வளாகங்கள் போன்றவற்றில் புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் முழுவதும் பூமிக்குள் மீண்டும் செல்வதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நிலத்தடி நீர் அதிகரித்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முழுமையான தண்ணீர் கிடைக்க வழி காணப்பட்டுள்ளது.

Related Stories: