கடலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கடலூர், செப். 23: கடலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்ட பணிகள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுப்பினர் செயலர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல்மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெரு, வண்டிப்பாளையம் பகுதியில் சங்கொலிநகர் மற்றும் வேதவிநயாகர் நகர் ஆகிய பகுதிகளில் செப்பனிடப்பட்டுள்ள புதிய தார் சாலைகளில் அரசு வழிகாட்டுதலின்படி அளவு மற்றும் தரத்தை நேரிடையாக ஆய்வு மேற்கொண்டார்.

கோதண்டராமபுரம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து, அப்பகுதி விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் உபகரணங்களை வழங்கினார். குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆடூர் அகரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வகுப்பறையில் எண்ணும் எழுத்தும் திட்ட செயல்பாடு முறைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து பூவாணிக்குப்பம் ஊராட்சியில் உள்ள ஐய்யனார் குளத்தை தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழி பட்டா மாற்றத்தில் மேற்கொள்ளப்படும் செயல்முறைகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலத்தில் இயங்கிவரும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து எளிய நடைமுறையில் துரிதமாக இணையவழி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், வேளாண்மை இணை இயக்குனர் ரவிச்சந்திரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அருண், மாநகராட்சி ஆணையர் நவேந்திரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: