மாவட்டத்தில் ரூ.1.77 கோடி மானியத்தில் 455 மல்பெரி விவசாயிகள் பயனடைந்தனர்

திருப்பூர், ஆக.10:  திருப்பூர் மாவட்டத்தில் மல்பெரி விவசாயத்தில் ரூ.1.77 கோடி மானியத்தில் 455 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு  பாரம்பரியமாக பட்டுத்தொழில் மேற்கொண்டு வரும் மாநிலங்களில் ஒன்றாக  திகழ்கிறது. இங்கு பெரும்பாலான விவசாயிகள் பரவலாக மல்பெரி சாகுபடி செய்து  வருகின்றனர். 57 ஆயிரத்து 472 ஏக்கர் பரப்பளவில் 29 ஆயிரத்து 172  விவசாயிகளால் மல்பெரி பயிர் சாகுபடி செய்யப்பட்டு பட்டுப்புழுவளர்ப்பு  மேற்கொள்ளப்படுகிறது. 2018-2019-ம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டில் 2,100  மெட்ரிக் டன் கச்சாப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு, தேசிய அளவில் 4-வது  இடமும், இறக்குமதி செய்யப்படும் வெண்பட்டுக்கு மாற்றாக 1,950 மெட்ரிக் டன்  வெண்பட்டு உற்பத்தி செய்து, மல்பெரி வெண்பட்டு உற்பத்தி செய்யும்  மாநிலங்களில் 2-வது இடத்தையும் பெற்றுள்ளது.

நடப்பாண்டில் 2,200 மெட்ரிக்  டன் கச்சாப்பட்டு உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அவற்றில் இறக்குமதிக்கு மாற்றான வெண்பட்டு நூல் உற்பத்தி 2,050 மெட்ரிக்  டன் ஆகும். மாநிலத்தின் மொத்த கச்சாப்பட்டு தேவை 3 ஆயிரம் மெட்ரிக் டன்னாக  மதிப்பிடப்பட்டுள்ளதால், கச்சாப்பட்டு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு  முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பட்டு நூற்பு  எந்திரங்கள் கொண்ட 25 பலமுனை பட்டு நூற்பு அலகுகளும், இறக்குமதி  செய்யப்பட்ட நவீன பட்டு நூற்பு எந்திரங்களை கொண்ட 4 தானியங்கி பட்டுநூற்பு  அலகுகளும் நிறுவப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் நிறைவடையும் போது,  மாநிலத்தின் பட்டு நூற்பு உற்பத்தி திறன், தற்போதுள்ள 25 சதவீதத்தில்  இருந்து 35 சதவீதமாக அதிகரிக்கும்.

 மேலும், தமிழகம் பட்டுநூற்பு, உப  பொருட்களை பல்வகைகளில் திறம்பட பயன்படுத்தி லாபம் ஈட்டும் வகையில்  நிரந்தரமான சந்தை வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டின் தேவையை உணர்ந்து தமிழ்நாட்டில் ஈரி பட்டு  வளர்ப்பு (ஈரி பட்டுப்புழுக்களுக்கு ஆமணக்கு, மரவள்ளி இலைகளை உணவளித்து ஈரி  பட்டுநூல் உற்பத்தி செய்வது) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மல்பெரி  சாராத பட்டுவளர்ப்பு வகை ஆகும். ஜவன்யா (வனம்), காடு உள்நாட்டின் பூர்வ  குடிமக்களால் மலைப்பாங்கான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது  தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு குறிப்பாக  பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கணிசமான வேலைவாய்ப்பினை உருவாக்குகிறது. ஆமணக்கு மற்றும் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள் விதை மற்றும் கிழங்கின்  உற்பத்தி அளவு மற்றும் தரம் பாதிக்காமல், அப்பயிர்களின் 20 சதவீத இலைகளை  மட்டுமே பயன்படுத்தி ஈரி பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்வதால் கூடுதல்  வருமானம் ஈட்டுகின்றனர்.

பட்டு சந்தையில் ஈரி பட்டுக்கு நல்ல தேவை உள்ளது.  தமிழ்நாடு அரசு 1979-ம் ஆண்டில் தொழில் மற்றும் வணிக துறையின் கீழ்  செயல்பட்டு வந்த பட்டுவளர்ச்சி பிரிவினை பட்டுவளர்ச்சித்துறை என  தனித்துறையாக சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வகையில்  மேம்படுத்தியது. பட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடைதல், தமிழ்நாட்டை  வெண்பட்டு மாநிலமாக உருவாக்குதல், தற்போதைய புதிய தொழில்நுட்பங்கள் மூலம்  பட்டுவளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளோரது, பொருளாதார நிலை முன்னேற உதவுதல்,  கிராமப்புற, சிறுநகர பகுதிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியன  பட்டுவளர்ச்சி துறையின் குறிக்கோளாகும். தமிழ்நாட்டில் பட்டுத்தொழில்  மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்து பட்டுவளர்ச்சித்துறை இயக்ககம்  செயல்படுத்தி வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை உதவி இயக்குனர்  கட்டுப்பாட்டில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், பொங்கலூர்  தொகுதிகளிலும், ஈரோடு உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் குண்டடம், தாராபுரம்  தொகுதியிலும், கோவை இயக்குனர் கட்டுப்பாட்டில் அவினாசி தொகுதியிலும் சுமார்  2,952-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து புழு வளர்ப்பு செய்து  வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 350 விவசாயிகள் புதியதாக மல்பெரி நடவு செய்து  பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பூர்  மாவட்டத்தை சேர்ந்த பட்டு விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த  பட்டுக்கூடுகளை அரசு பட்டுக்கூடு அங்காடி தருமபுரி மற்றும் கோவையில்  விற்பனை செய்து வந்த நிலையில், உடுமலை பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிக  அளவில் பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்வதாலும், பட்டுக்கூடுகளை உடனடியாக  விற்பனை செய்து நியாயமான விலையை பெற்றிட, உடுமலை பட்டுவளர்ச்சித்துறை, உதவி  இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அரசு  பட்டுக்கூடு அங்காடி மைவாடியில் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில்  திருப்பூர் மாவட்டத்தில் மல்பெரி நடவிற்கு மானியம் ரூ.10 ஆயிரத்து 500  வீதம் 412 ஏக்கரில் 203 விவசாயிகளுக்கும், தனி புழுவளர்ப்பு மனை மானியம்  ரூ.1.20 லட்சம் மதிப்பில் 35 விவசாயிகளுக்கு ரூ.55.20 லட்சமும், நவீன  புழுவளர்ப்பு தளவாடங்கள் வாங்க மானியத்தொகை ரூ.52 ஆயிரத்து 500 வீதம், 135  விவசாயிகளுக்கு ரூ.70.87 லட்சம் மதிப்பிலும், முன்னோடி பட்டு விவசாயிகள்  பவர் டில்லர் வாங்குவதற்கு மானியமாக ரூ.35 ஆயிரம் மதிப்பீட்டில் 35  விவசாயிகளுக்கு ரூ.12.25 லட்சமும், மர மல்பெரி நடவு மானியமாக ஏக்கருக்கு  ரூ.15 ஆயிரம் என ரூ.62.25 லட்சம் மதிப்பில் 41.50 ஏக்கரும், மண்புழு  உரக்குழு அமைக்க ஒரு அலகிற்கு மானியமாக ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பீட்டில்  22 விவசாயிகளுக்கு ரூ.27.50 லட்சமும், சொட்டு நீர் பாசன திட்டத்தின் மூலம்  25 விவசாயிகள் 45 ஏக்கர் பரப்பளவில் என ரூ.1.77 கோடி மானியத்தில் 559.50  ஏக்கரில் 455 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்தார்.

Related Stories: