டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் அரசு பணிமனையில் பேருந்துகள் நிறுத்திவைப்பு

ஆலங்குடி,ஆக.10: டிரைவர், கண்டக்டர்கள் பற்றாக்குறையால் அரசு பணிமனையில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். ஆலங்குடி அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு பேருந்து பணிமனையில் இருந்து ஆலங்குடி சுற்றுவட்டார கிராமங்களுக்கு 14 அரசு நகர பேருந்துகள் செயல்பட்டு வருகின்றது. இப்பேருந்துகள் அருகில் உள்ள வெட்டன்விடுதி, குப்பகுடி, வெங்கிடகுளம், நெடுவாசல், மாங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றது. இந்நிலையில் பேருந்துகளுக்கு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பற்றாக்குறை காரணமாக சில நகர பேருந்துகள் இயக்கப்படாமல் பணி மனையிலும் பேருந்து நிலையங்களிலும் நிறுத்தப்பட்டு இருந்து வருகின்றது.

இதனால் அருகில் உள்ள கிராமங்களுக்கு பொதுமக்களும் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்ல மாணவ மாணவிகளும் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆலங்குடி பகுதிகளுக்கு வேலைக்கு வரும் பெண்கள் இலவச பயண பேருந்துகளில் பயணம் செய்ய முடியாமல் தனியார் பேருந்துகளையே நாடி வருகின்றனர். இந்நிலையில் பணிக்கு வரும் ஓட்டுநர்கள் தங்களது பணியை முடித்து ஓய்வெடுக்க செல்ல முடியாமல் ஆட்கள் பற்றாக்குறை உள்ள வழித்தடங்களுக்கு பேருந்து ஓட்ட செல்வதால் தொடர் வேலை பணி காரணமாக பணிக்கு வரும் ஓட்டுநர்களின் நடத்துனர்களும் பணி சுமைக்கு ஆளாகி வருகின்றனர்.

இதை தொடர்ந்து ஆலங்குடி பேருந்து பணிமனையில் பற்றாக்குறையில் உள்ள ஓட்டுநர்கள் நடத்துனர்களை விரைந்து பணியமர்தத் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: