திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்

திட்டக்குடி, ஜூலை 29: திட்டக்குடி தாலுகா ராமநத்தம் கிராமத்தில், முஸ்லிம் மக்களால் கிரயம் பெற்ற இடத்தை மயானமாக பயன்படுத்த அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திக் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், முஸ்லிம் மக்கள் கிரயம் பெற்ற இடத்திற்கு அருகே குடியிருப்புகள் இருப்பதால், அப்பகுதியை மயானமாக பயன்படுத்தக்கூடாது. அந்த இடம் எந்த நோக்கத்திற்காக வாங்கப்பட்டதோ அதற்காக பயன்படுத்த வேண்டும் என குடியிருப்போர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம் தரப்பில், 2005ம் ஆண்டு தனிநபரிடம் கிரயம் பெற்று வக்பு போர்டு மூலம் கடைகள் கட்டவும், கபர்ஸ்தானாக பயன்படுத்துவதற்காக அனுமதி பெறப்பட்டுள்ளது. மயானத்தில் உயரமாக சுற்றுச்சுவர் அமைத்து குடியிருப்பில் உள்ளவர்களுக்கு இடையூறு இல்லாதவாறு உடல் அடக்கம் செய்வதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஒருவாரத்திற்குள் முடிவு தெரிவிப்பதாக குடியிருப்போர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: