சுப நிகழ்ச்சியில் தவில், நாதஸ்வரம் வாசிக்க அழைப்பது குறைந்தது வறுமையில் வாடும் நாட்டுப்புற கலைஞர்கள்

பல்லடம், ஜூலை 27:பல்லடம் அருகே கரடிவாவிபுதூர் பகுதியில் 15 குடும்பத்தினர் தங்களது குலத் தொழிலாக நாதஸ்வரம், தவில் வாசிப்பை 6 தலைமுறைகளாக செய்து வருகின்றனர். அக்கிராமத்தில் 30 பேர் இசைக்கருவிகளை வாசித்து வருகின்றனர். தற்போது திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு போதிய ஆர்டர் வராத காரணத்தினால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு குடும்பத்தினர் சிரமப்பட்டு வருவதாக இசைக்கலைஞர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து திருப்பூர்,கோவை,ஈரோடு,நீலகிரி மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத் தலைவர் கரடிவாவிபுதூர் எஸ்.ஆண்டவன் கூறியதாவது:

 முன்பு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு நாதஸ்வரம், தவில் இசை வாத்தியங்கள் மிகவும் அவசியமாக மங்கள இசையுடன் நடந்தேறின. தற்போது கால மாற்றத்தினால் சிலர் மட்டுமே பாராம்பரிய நடைமுறைகளை கடைபிடித்து வருகின்றனர். பலர் கால சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு அதற்கேற்ப சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

 மேலும் பலர் பேண்ட் வாத்தியம் உள்ளிட்ட மேற்கிந்திய இசை வாத்தியங்கள் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த செண்டை உள்ளிட்ட இசை வாத்தியங்களை நோக்கி சென்று விடுகின்றனர். செலவினங்களை குறைப்பதற்காகவும், காலவிரயம், அலைச்சல்களை தவிர்க்கவும் கோயில்களில் சுவாமி சன்னதி முன்பு திருமணங்களை நடத்தி ஏதாவது ஒரு திருமண மண்டபத்தில் அல்லது ஓட்டல்களில் ஒரு வேளை எல்லோரையும் அழைத்து இன்னிசை கச்சேரி அல்லது கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றம், பாட்டு மன்றம் அல்லது ஒலிபெருக்கியில் பாடல்களை ஒலிபரப்பி, மின் விளக்கு அலங்காரம், மலர்களால் மேடை அலங்காரம் செய்தும் பல வகை உணவு வகைகளுடன் விருந்து வைத்து திருமணங்களை நடத்தி விடுகின்றனர்.

மேலும் முன்பு போல் பெண் குழந்தைகளுக்கு பூப்புனித நீராட்டு விழா மங்கல இசை முழங்க ஊர்வலமாக வந்து திருமண மண்டபங்களில் நடத்தாமல் தங்களது வீட்டு அளவிற்கு முறைக்காரர்களை மட்டும் அழைத்து எளிமையாக முடித்து விடுகின்றனர். இதன் காரணமாக மங்கல இசைக்களைஞர்களுக்கு ஆர்டர் கிடைப்பது குறைந்து வருகிறது. தற்போது வளர்பிறை முகூர்த்தங்களுக்கு மட்டுமே ஆர்டர் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு 4 ஆர்டர் மட்டுமே கிடைக்கும். ஒரு நபருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே வருவாய் கிடைக்கிறது.

ஆண்டிற்கு ஆடி, புரட்டாசி, மார்கழி, சித்திரை ஆகிய 4 மாதங்களில் பெரும்பாலான இந்துக்கள் சுப காரியங்கள் நடத்துவதில்லை. அதனால் அம்மாதங்களில் வருவாய் இன்றி இருப்போம். விவசாயம், விசைத்தறி, பின்னலாடை, கோழிப்பண்ணை உள்ளிட்ட கிடைக்கின்ற தொழிலுக்கு சென்று வேலை செய்து சம்பளம் பெற்று வாழ்ந்து வருகிறோம். இதனால் இசை தொழில், அல்லது வேறு பணிக்கு செல்வது என இரண்டிலும் உரிய கவனம் செலுத்த முடிவதில்லை.

போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் இன்றைய இளைஞர்கள் நாட்டுப்புற இசையை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. படித்து வேறு தொழிலுக்கு சென்று வருகின்றனர். நாங்களும் வறுமையுடன் போராடி வருவதால் இத்தொழிலை எங்களது வாரிசுகள் கற்று கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதில்லை. அழிந்து வரும் நாட்டுப்புற இசை தொழிலை காப்பாற்ற இத்தொழிலை செய்து வரும் கலைஞர்களுக்கு அரசு மாதம் தோறும் ஊக்க தொகை வழங்க வேண்டும். பெரும்பாலான தொழிலாளர்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அதில் வீடு கட்டி தர வேண்டும். 60 வயதான இசைக்கலைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் அரசால் வழங்கப்படுகிறது. அதனை பெற அரசு துறை அலுவலகங்களுக்கு சென்று அலைந்து அவர்கள் கேட்கும் ஆவணங்களை கொடுத்து அத்தொகை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. 60 வயது கடந்தவர்களுக்கு பிறப்பு சான்று ஆவணம் இல்லை.

மேலும் பலர் பள்ளிக்கூடமே சென்றது இல்லை. இது போன்ற இடர்பாடுகளால் அரசின் திட்டம் உரியவர்களுக்கு சென்றடையவில்லை. இக்குறையை போக்கி திட்டத்தை எளிமைபடுத்தினால் தான் இசைக்கலைஞர்களுக்கு ஒய்வூதியம் கிடைக்கும்.  இசைவாத்தியங்களை பேருந்தில் ஏற்றி செல்ல பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும். நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கு  தமிழ்நாடு முழுவதும் இசை வாத்தியங்களுடன் அரசு பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள பஸ் பாஸ் அரசு வழங்க வேண்டும். அழிந்து வரும் நாட்டுப்புற இசையை பாதுகாக்க தமிழகத்தில் மாவட்டம் தோறும் இசை பயிற்சி நிறுவனத்தை அரசு நிறுவ வேண்டும். அதில் பயில விரும்பும் மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்றும் நாடகம், தப்பாட்டம் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு தருவது போல் நாட்டுப்புற கலைஞர்களின் மங்கல இசை நிகழ்ச்சி நடத்தவும் வாய்ப்பு நல்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். அழிந்து வரும் கலையை காப்பாற்ற வலியுறுத்தல்

Related Stories: