ஓய்வூதியர்கள் சிரமங்களை குறைக்க வீடு தேடி வரும் வாழ்நாள் சான்றிதழ் சேவை

புதுக்கோட்டை, ஜூன் 25: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டாண்டுகளாக (2020-2021) கொரோனா தொற்று காரணமாக ஓய்வூதியர் நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிதித்துறை (ஓய்வூதியம்) தெரிவித்துள்ளபடி 2022ம் ஆண்டிற்கான ஓய்வூதியர் நேர்காணல் வருகிற 1ம் ேததி முதல் 30.9.2022 வரை நடைபெற உள்ளது. 2022ம் ஆண்டிற்கான ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் கீழ்காணும் 4 முறைகளில் நடைபெறும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது. தபால் மூலம் வாழ்நாள் சான்று சமர்ப்பித்தல். ‘ஜீவன் பிரமாண்’ என்ற இணையதள சேவை மூலம் மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பித்தல். வீட்டு வாசலுக்கு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை மூலம் வாழ்நாள் சான்று சமர்ப்பித்தல் நேரில் வருகிறது.

அரசு ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அஞ்சல் துறை மூலம் செய்யப்பட்டு, இதற்கான புரிந்துரை ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது. நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள்படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ஜீவன் பிரமாண் திட்டத்தின் மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ‘ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரர்களிடம் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஓய்வூதியர்களின் வீண் அலைச்சலை தவிர்த்து இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அளிக்கும் சேவையின் மூலம் வீட்டில் இருந்தபடியே ரூ.70 சேவைக்கட்டணத்துடன் மின்னணு வாழ்நாள் சான்றினை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் நகர்புற தபால் அலுவலகங்களிலும் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பெறுவதற்கான சேவைகள் வழங்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் அனைவரும் மேற்கண்ட வாய்ப்புகளை பயன்படுத்தி ஜூலை 2022 முதல் செப்டம்பர் 2022ம் மாதத்திற்குள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் 100 சதவிகிதம் வாழ்நாள் சான்றிதழ் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தெரிவித்துள்ளார்.

Related Stories: