கோடை விடுமுறை முடிந்து கடலூர் மாவட்டத்தில் 2,180 பள்ளிகள் திறப்பு

கடலூர், ஜூன் 14:  கோடை விடுமுறை முடிந்து, கடலூர் மாவட்டத்தில், 2,180 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர். கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு, மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள், கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமலே இருந்து வந்தன. இதையடுத்து, நோய்த்தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக நோய்த் தொற்று குறைய தொடங்கியது. இதனால், 17 மாதங்களுக்கு பிறகு கடந்த வருடம் செப்டம்பர் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

மேலும் நவம்பர் மாதம் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த மே மாதம், பொதுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து நேற்று காலை, கடலூர் மாவட்டத்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1,188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் என மொத்தம் 2,180 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் புதிய சீருடை அணிந்து பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர். ஒரு மாதத்திற்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர். பெரும்பாலான மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கூடங்களுக்கு சென்றதை காண முடிந்தது.மேலும் தங்கள் நண்பர்களை சந்தித்து உற்சாகத்துடன் சிரித்து மகிழ்ந்தனர். இதையடுத்து இறை வணக்கத்துடன், பள்ளிகளில் முதல் நாள் வகுப்புகள் ஆரம்பமானது. முதல் ஒரு வாரத்திற்கு, மாணவர்கள் அனைவருக்கும், புத்துணர்வு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், அனைத்து பள்ளிகளிலும் புத்துணர்வு பயிற்சி நடைபெற்றது.

Related Stories: