தேன்கனிகோட்டை அருகே கல் குவாரிகளை மூடக்கோரி கருப்புக்கொடி ஏந்தி மறியல்

தேன்கனிக்கோட்டை, ஜூன் 8: தேன்கனிக்கோட்டை அருகே கல் குவாரிகளை மூடக்கோரி கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேன்கனிகோட்டை அருகே கொரட்டகிரி கிராமத்தில் ஊரை சுற்றி 5க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்குவாரிகளில் இருந்து வெளியேறும் தூசுகளால் நெற்பயிர்கள் கடும் சேதமடைந்து வருகிறது. பாறைகளை உடைப்பதற்காக வைக்கப்படும் வெடிகளால் கிராமத்தில் உள்ள பல்வேறு வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், குவாரிகளிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் இருந்து வரும் புகை மற்றும் தூசியால் பொதுமக்கள், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தி குவாரிகளை மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கல் குவாரிகளை மூட வேண்டும் அல்லது ஜல்லி கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகளை கிராமத்தின் வழியாக அனுமதிக்காமல் மாற்றுப்பாதை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு கொரட்டகிரி கிராம பகுதியில் இயங்கி வந்த கல் குவாரிகளை மூடியது.

இந்நிலையில் மூடப்பட்டு கிடந்த கல்குவாரிகள் அனைத்தும் நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது. மேலும், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான கொரட்டகிரி கிராம மக்கள் அப்பகுதியில் கருப்புக்கொடி ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கல் குவாரிகளால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறோம், கல் குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் அல்லது ஜல்லி கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகளை வேறு பாதை வழியாக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: