உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பாபநாசம் சிறை வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பாபநாசம், ஜூன் 7: பாபநாசம் கிளை சிறை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நீதித்துறை நடுவர் அப்துல்கனி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பாபநாசம் கிளை சிறை வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் உத்தரவுப்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான சுதா வழிகாட்டுதலின்படி, பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான அப்துல்கனி கிளை சிறை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். அப்போது நாமும் நம் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டு பராமரித்து இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். இதில் அரசு வழக்கறிஞர் வெற்றிசெல்வன், வழக்கறிஞர் சங்கத்தினர்கள் கம்பன், ஜெயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பாபநாசம் கிளை சிறையின் கண்காணிப்பாளர் திவான் மற்றும் லட்சுமணன் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சட்ட பணியாளர் தனசேகரன் செய்தார்.

Related Stories: