வேலாயுதம்பாளையம், மே 30: நொய்யல் அருகே தீராத நோயால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடி குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (60). இவரது மனைவி ராஜேஸ்வரி (52). இவர்களுக்கு திவ்யா, கமலி என்ற இரு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. இதனால் உடல்நிலை பாதித்து வந்தது. பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் ராஜேஸ்வரி மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த ராஜேஸ்வரி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனக்கு தானே ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.
